சனி, 28 மார்ச், 2009

காலச் சுவடுகள் - இந்தியா மீது பாகிஸ்தான் திடீர் படையெடுப்பு





இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வரலாற்று புகழ் பெற்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் மிக முக்கியமானது 1971 டிசம்பரில் பாகிஸ்தானுடன் நடந்த போரில் மகத்தான வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை விடுவித்து, "வங்காளதேசம்" என்ற பெயரில் தனி சுதந்திர நாடாக்கியதாகும்

1947 ஆகஸ்ட் 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்தது. பாகிஸ்தானில் மேற்குப் பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் என்று இரண்டு பகுதிகள். மதம் இரண்டு பகுதிகளையும் ஒன்றுபடுத்தினாலும், மொழி அவர்களை வேறு படுத்தியது. மேற்குப் பாகிஸ்தானில் வசிப்பவர்கள் உருது பேசும் முஸ்லிம்கள், கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள். மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
1970_ல் பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் நீண்ட இடைவெளிக்குப்பின் நடந்தது. மொத்தமுள்ள 313 இடங்களில் 167 இடங்களை கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த முஜிபுர் ரகிமானின் "அவாமி லீக்" கட்சி கைப்பற்றியது. மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவரான பூட்டோவின் பாகிஸ்தான் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்திலிருந்தது. முறைப்படி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற முஜிபுர் ரகிமான்தான் பாகிஸ்தான் முழுமைக்கும் பிரதமராக வேண்டும். ஆனால் அவர், கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆயிற்றே. அதனால், முஜிபுர் ரகிமானிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு பூட்டோவும், மேற்கு பாகிஸ்தானின் இதரத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் அதிபராக (ராணுவ சர்வாதிகாரியாக) இருந்தவர் யாகியா கான்.
"பூட்டோவும், நீங்களும் சேர்ந்து ஆட்சி அமையுங்கள்" என்று யோசனை கூறினார். ஆனால் அதற்கு ரகிமான் ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தானில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. மார்ச் 3_ந்தேதி பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் 26_ந்தேதி நள்ளிரவு முதல் கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவம் பயங்கர அடக்கு முறையில் ஈடுபட்டது.
முஜிபுர் ரகிமானும், அவாமி லீக் தலைவர்களும், பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். ரகிமானின் ஆதரவாளர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஓடிவந்தனர். ஜுன் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டது. இதனால் இந்தியாவுக்குப் பெரும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. இந்த அகதிகள், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டனர். "கோடிக்கு மேற்பட்டவர்கள் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும்" என்று பாகிஸ்தானை இந்திரா எச்சரித்தார்.
அகதிகள் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உறவு சீர்கேடு அடைந்தது. இந்நிலையில், 1971 டிசம்பர் 3_ந்தேதி மாலை இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென்று தாக்குதல் நடத்தியது. அமிர்தசரஸ், பதன் கோட், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜாம்நகர், அம்பாலா, ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள விமான தளங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசின. விமானத்தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரும் எல்லை நெடுகிலும் சுடத்தொடங்கினர். அது மட்டுமின்றி, போர் நிறுத்த எல்லைக்கோட்டைத் தாண்டி காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பதிலடி பாகிஸ்தான் இந்தத் தாக்குதலைத் தொடங்கியபோது பிரதமர் இந்திரா காந்தி கல்கத்தாவில் இருந்தார்
அவரும், வெளிïர்களில் இருந்த மற்ற அமைச்சர்களும் அவசரமாக டெல்லி திரும்பினர். மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்திரா காந்தி தலைமையில் நள்ளிரவில் நடந்தது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது என்றும், இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மேற்குப் பாகிஸ்தானில் உள்ள சர்கோதா, மூரித், மியான்லால், ஹார் முதலிய இடங்களில் உள்ள விமான தளங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. லாகூர் அருகில் உள்ள விமான தளங்கள் மீதும் விமானத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலால், பாகிஸ்தானின் ஏராளமான போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்தியா _ பாகிஸ்தான் போர் முழு அளவில் மூண்டது
நன்றி : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin