சனி, 28 மார்ச், 2009

காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்

20-25 வருடங்களுக்கு முன்பு வரதட்சினை வாங்கக்கூடாது, கொடுக்கக்கூடாது, கந்தூரிக் கடைக்குப் போகக்கூடாது, தொழும்போது தொப்பி அவசியமில்லை, அத்தஹியாத்தில் கலிமா விரலை ஆட்டனும், கூட்டு துவா கூடாது இப்படியெல்லாம் சொல்லிகொண்டு சிலர் பலே, பழைய ஆலிம்சாக்களை கேள்வி கேட்டும், ஆதாரம் கேட்டும் முஸ்லிம்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தங்களை குர்.ஆன் ஹதீஸை மட்டும் ஆதாரமாகக் கொள்ளும் "தவ்ஹீது"வாதிகள் என்றும் சொல்லி புரட்சி செய்தார்கள்.

தலைப்பா கட்டியவரையும்,தாடி வைத்தவரையும்,கோழி அறுப்பவரையும், தாயத்து முடிந்து கொடுப்பவரையுமே மார்க்கம் அறிந்தவர்களாக நம்பிக் கொண்டு, மாதம் ஒரு சிறப்பு தினம் உருவாக்கி ஆயுத பூசைக்கும் பாத்திஹா ஓதி ஜீவனம் நடத்தியவர்கள் தாழ்வு மனப்பன்மை கொள்ளும்வகையில் சமுதாயத்தில் சத்தியமார்க்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.

குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே முன்னிறுத்திய பாவத்திற்காக?! சமூக பகிஷ்கரிப்பு செய்யப்பட்டார்கள்.வரதட்சினை வாங்கும் 95% திருமணங்களைப் புறக்கனித்து சமபந்தி/வலீமா விருந்துகளைத் துறந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதெனில் நபித்துவத்திற்கு முந்தைய பத்து வருட மக்கா வாழ்க்கையைப்போல் எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளானர்கள்.

ஏழெட்டு வருடங்கள் மதறஸாவில் ஓதிக்கற்று பக்தியுடன் பரனில் அடுக்கப்பட்ட கிதாபுகளை தூசிதட்டி ஆதாரங்களைத் தேடச் செய்தார்கள். தராவிஹ் எத்தனை ரக்காத்துகள் என்பதற்கு விடைதேட சமுதாயத்தைக் கிட்டத்தட்ட சஹாபாக்கள் காலத்திற்கே அழைத்துச் சென்றார்கள். எங்கு சென்றார்கள் இந்த அக்மார்க் தவ்ஹீதுவாதிகள்? என்று தேடிக்கண்டுபிடிப்பதே இப்பதிவின் நோக்கம்.

நான்கு மத்ஹபுகளால் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்று முழங்கிய இவர்கள் இன்று நான்குக்கும் மேற்பட்ட மத்ஹபுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இமாம்களைக் கேலிபேசிய இவர்கள் இன்று கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தஹியாத்தில் விரலை ஆட்டலாமா வேண்டாமா என்று விவாதத்தை தொடங்கியவர்களால் இன்று சமுதயமே ஆடிப்போயுள்ளது!பச்சைப் பிறைக்கொடியை கிண்டலடித்தவர்களே இன்று பச்சையை தங்கள் கொடியில் வைத்துக் கொண்டு தவ்ஹீது அரசியல் செய்துவருகிறார்கள். தனது ஒரு கண்போனாலும் பரவாயில்லை-தன்னை எதிர்த்த சகோதரனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

நம்பி வந்தவர்களை அரசியல்வாதிகளிடம் கூட்டம் காட்டி அரசியல் பேரம் பேசிப் பலனடைகிறீர்கள்! பஞ்சப்பரதேசிகளைப் போலிருந்த நீங்கள் புத்தகம் எழுதியும் டிஜிட்டல் பிரச்சாரம் செய்தும் பணம் சேர்த்து விட்டு ஆயுளில் ஒருமுறை ஜகாத் போதுமென்கிறீர்கள்!

செங்கதிரும் விண்மதியும் சேர்ந்தே கையில் தந்திடினும் எம்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நபிவழி எங்கே? வின்டிவீயில இடம்தந்தால் எங்கள் கொள்கையை கிடப்பில்போட்டு கூட்டணிப் பிரச்சாரம் செய்வோம் என்று சோரம்போன உங்கள் வழி எங்கே?

போதும் உங்கள் சமுதாயச்சேவை! இனி குடும்பத்துடன் கந்தூரிக்கும் செல்ல மாட்டோம் நீங்கள் குடும்பத்துடன் அழைக்கும் பேரணிக்கும் செல்ல மாட்டோம் என்ற மனநிலைக்கு பக்குவப்பட்டுவிட்டோம். எங்களிடம் வலியுறுத்திய தூய இஸ்லாத்தை இனிமேலாவது நீங்களும் பின்பற்றுங்கள்! உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வெளிஆதாரம் கேட்டு விவாதத்திற்கு அழைக்காமல், எஞ்சிய காலத்திலாவது அரசியல் சாக்கடையில் வீழ்ந்த தவ்ஹீதுக் கொள்கையை மீட்டெடுக்க ஒன்றுசேருங்கள்!

அன்புடன்,

அபூஅஸீலா-துபாய்

தகவல் : http://adiraixpress.blogspot.com/2009/03/blog-post_24.html

நாள் : 24 - 03 - 2009.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin