வியாழன், 26 மார்ச், 2009

முஸ்லிம்களிடையே பகைமைத் தீ!

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் - வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை".
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்

இங்கு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இபாதத் எனும் சொல் வழிபாட்டை குறிப்பதில்லை. ஏனெனில், யாராவது ஷைத்தானுக்குச் சிலையோ உருவமோ வடித்து அதனை வணங்குவதாக இதுவரை எங்கும் கேள்விப்படவில்லை. மாறாக, இபாதத் என்பது இந்த இடத்தில் விரிவான பொருளைக் கொண்டுள்ளது. அதாவது, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஷைத்தானின் விருப்பங்களுக்கு ஏற்ப நடப்பது என்பது தான் அது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றது.

"என் தந்தையே! ஷைத்தானுக்கு வழிபடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான்". (திருமறை 19:44)

கவனத்தில் கொள்ளவும்:

இந்த ஹதீஸில் இறைத்தூதர் பயன்படுத்தியுள்ள தொழுகையாளிகள் எனும் சொல் தொழுகையை முறையாகப் பேணி வருபவர்களைக் குறிக்கும். அவ்வாறுத் தொழுகையைப் பேணி வருவதால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பும் அச்சமும் நிறைந்திருக்கும். இத்தகைய மக்களுக்கு எதிராக ஷைத்தானின் சூழ்ச்சி செல்லுபடியாகமாட்டா! அதாவது இவர்கள் ஒருபோதும் ஷைத்தானை வழிபட மாட்டார்கள். மேலும் இத்தொழுகையாளிகள் அவனுடைய விருப்பங்களின் படி நடக்கவும் மாட்டார்கள்! எனினும் அவர்களிடையே பரஸ்பரம் தவறான எண்ணங்களை உருவாக்கி அந்தத் தொழுகையாளிகளிடையே மோதலையும் முரண்பாட்டையும் ஷைத்தானால் ஏற்படுத்தி விட முடியும்.

தொழுகையை முறையாகப் பேணி வரும் தொழுகையாளிகளான முஸ்லிம்களில் அதுவும் இறை மார்க்கத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் போட்டி போட்டுச் செயல்படும் சகோதரர்களிடையே இத்தகைய மோதலும் முரண்பாடும் பரவலாகக் காணப்படுவதைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் அஞ்சிய இத்தகைய பிளவு நிலையை விட்டு முஸ்லிம்களை இறைவன் காத்தருள்வானாக.

நன்றி : சத்யமார்க்கம்காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin