வியாழன், 26 மார்ச், 2009

மூன்றாவது முறையாக சிங்கப்பூர் தேசிய விருது வென்ற கனகலதா


சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. சிங்கப்பூர் அரசு தமிழ் மூலமான கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் தருகிறது. தேசிய கலை மன்றம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புக்களின் மூலம் நாட்டின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றன.

சிங்கப்பூரில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய அந்நாட்டின் நான்கு தேசிய மொழிகளிலும் வெளிவரும் சிங்கப்பூர் குடிமக்கள், மற்றும் அந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களின் நூல்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கிறது. 10,000 சிங்கப்பூர் வெள்ளி பணப் பரிசில் கொண்டதாக இந்த விருது உள்ளது.

எழுத்தை ஊக்கப்படுத்தி வளர்க்கும் நோக்கில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம், தேசிய புத்தகப் பரிசு என்ற பெயரில் 1980ம் ஆண்டு முதல் இவ்விருதினை வழங்கி வருகிறது. இடையில் சில காலம் தடைப்பட்டிருந்த இவ்விருது 2004ம் ஆண்டு முதல் மீண்டும் தேசிய இலக்கிய விருது என்ற பெயரில் நான்கு மொழி நூல்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழ் மொழி நூலுக்கான இந்த விருதைத் தனியொருவராக நிலைத்து நின்று பெற்று வருகிறார் கனகலதா என்ற பெண் படைப்பாளி. இலங்கையில் நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகலதா இளம் வயதிலேயே சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்.சிங்கப்பூர் ஊடகத்துறையிலும், தமிழ் சமூகத்திலும் வி.ரி.அரசு என்று பரவலாக அறியப்பெற்ற அமரர் வை.திருநாவுக்கரசு, சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகையான தமிழ் முரசு ஆசிரியராக இருந்தபோது, அதில் இணைந்து தமிழ் முரசு ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அதனூடாக சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் பல கதைகளையும் கவிதைகளையும் எழுதித் தன் படைப்பாற்றலை அமரர் திருநாவுக்கரசுவின் வழிகாட்டலில் வளர்த்துக் கொண்டவர். இவரது முதலாவது நூலான தீவெளி என்ற கவிதைத் தொகுப்பிற்கு சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருதினை 2004ல் பெற்றுக்கொண்ட கனகலதா, 2006ம் ஆண்டில் தனது பாம்புக் காட்டில் ஒரு தாழை என்ற கவிதைத் தொகுப்பிற்காக சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருதினை இரண்டாவது முறையாக பெற்றார்.

'நான் கொலை செய்யும் பெண்கள்'...

அண்மையில் இவர் எழுதிய 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு 2008ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருது கிடைத்துள்ளது.நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இந்நூலில் லதாவின் தேர்ந்த பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளின் களம் சிங்கப்பூராக இருந்தாலும், அதில் வெளிப்படுத்தப்படும் கருவும் சிந்தனைகளும் எண்ணப்போக்குகளும் உலகப் பெண்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகளாகவே அமைந்திருக்கின்றன.

பலவீனமானவர்களாகவே சித்திரிக்கப்படும் இனமான பெண்கள் அதிலிருந்து மீண்டுவர முனையும் போக்கும் அந்த மீட்சிக்கான அவர்களின் முனைப்பும் காத்திருப்பும் இக்கதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது.அடையாளம் என்ற முதலாவது கதையில் சிங்கப்பூரில் வாழும் ஓர் இந்தியப்பெண் தன் அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சி சித்திரிக்கப்படுகின்றது. அதன் பின்னணியில் அவளது குடும்பவாழ்வியல் சூழலில் பலவீனமான பெண் என்ற அடையாளச் சிக்கலிலிருந்து விடுபடமுனையும் தீவிரமும், அங்கலாய்ப்பும் கூடவே வெளிப்படுகின்றது.

நாளை ஒரு விடுதலை என்ற கதையில் வரும் வசந்தி வீட்டுப் பணிப்பெண்ணாக 200 வெள்ளி மாத வேதனத்திற்காக வேலைவாய்ப்புப் பெற்று குடும்பத்தினரைக் காக்கவென்று சிங்கப்பூர் வந்தவள். சிங்கப்பூர் தெருக்களிலும் தொழில்புரியும் வீட்டிலும் பெண் என்ற காரணத்தினால் அவள் எதிர்நோக்கும் விரச நோக்குகள் அதிலிருந்து விடுபட அவள் தேடும் பாதைகள் அழகாக விவரிக்கப்படுகின்றன.

ஆணாதிக்க விடுதலை...மழை-

அப்பா என்ற கதையில் தான் அறவே வெறுக்கும் பொறுப்பற்ற குடிகாரத் தந்தை என்ற ஆண்மையின் ஆளுமையிலிருந்து விடுபடத் துடித்த ஒரு பெண்ணின் ஆதங்கம் கோபம் என்பன நளினமாக வெளிப்படுகின்றன.

அறை என்ற கதையில் தான் ஒரு அறையில் தற்காலிகமாகக் குடியிருக்கும் வீட்டில் நிகழ்ந்த ஒரு மரணத்தைத் தொடர்ந்து அடுத்தநாள் இயல்புவாழ்வுக்குத் தயாராகும் ஒரு பெண்ணின் ஒட்டாத உறவுகளின் சலனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.வாழ்வின்மீதான துளித்துளியான நம்பிக்கைகள் கதைகளில் மறைந்தும் மறையாமலும் வெளிப்படுவதை இக்கதைகளில் மிக நுணுக்கமாகப் பின்னியிருக்கிறார் கனகலதா.

ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன. சுயம் என்ற ஒன்று இருக்கின்றது. வாழ்க்கையும், அதை வாழ்ந்து வரும் சூழலும், தான் சார்ந்துள்ள சமூகமும், அந்தச் சுயத்தையும், இயல்பான அடையாளங்களையும் மெல்ல மெல்லச் சிதைக்கின்றன அல்லது சிதைவடைவதற்கான அல்லது சிதைத்துக்கொள்வதற்கான சூழலை அவை உருவாக்கித் தருகின்றன.

இப்படியாக ஒரு பெண்ணின் சுயம் அழிக்கப்படுவதையும், மாற்றம்பெறுவதையும், தொலைக்கப்படுவதையும் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இந்த நூலில் உள்ள பத்துக் கதைகளும் சொல்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ப் படைப்பாளியொருவர், தான் தொடர்ந்து வாழத் தேர்ந்த ஒரு வாழிட நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு விருதினைப் பெறுவதென்பது, அதுவும் தொடர்ந்து மூன்று தடவைகள் அந்த இலக்கிய விருதினைப் பெற்றுக்கொள்வதென்பது அந்தப் படைப்பாளிக்கு மட்டும் பெருமைதரும் விடயம் அல்ல,

அவரது தொப்புள்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கும் பெருமைதரும் விஷயமாகும். தமது விருப்பத் தெரிவாக அல்லாது, தமது பெற்றோருடன் கூடிப் புலம்பெயர்ந்தமையால் புகலிட நாடுகளில் நிரந்தரமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்ட இரண்டாம் தலைமுறை ஈழத் தமிழர்களுக்கும் இத்தகைய வெற்றிகள் ஊக்கசக்தியாகவும், வழிகாட்டிகளாகவும் அமைந்துவிடும் என்பது ஆரோக்கியமான விஷயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin