புதன், 18 மார்ச், 2009

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு மீலாது நபி மாநாடு

மீலாது நபியை முன்னிட்டு குவைத்தில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.

அப்ரக் (பழைய) ஃகைத்தான் பகுதியில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல், ஹழ்ரத் உமர் இப்னு ஃகத்தாப் அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது.

மழலையர் நிகழ்ச்சி, உத்தம நபியின் உதய தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் 'மீலாது போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா' என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் மவ்லானா அப்துல் லத்தீஃப் தலைமையேற்க, குவைத் லக்கி அச்சகத்தின் அதிபர் லக்கி. சுலைமான் பாட்சா முன்னிலை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் கபீர் அலீ திருக்குர்ஆன் கிராஅத் ஓத, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லானா முஹம்மது மீராஷா வரவேற்புரையாற்ற, குவைத் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் கவிஞர் ஷம்சுதீன் கவிதை வாசிக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ கலீல் அஹ்மத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் மாலை 6:30 மணி முதல் மாநாட்டு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

முதல் நிகழ்ச்சியாக தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதலிடத்தை பெற்ற செல்வி. S. பர்வீன் ஃபாத்திமா என்ற மாணவியின் சொற்பொழிவும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவி முஹம்மது அஜ்வத் (இலங்கை) அவர்களின் மதரஸா அல் ஃபலாஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம் நடத்திய பல்வேறு போட்டிகளில் முதலிடங்களை வென்ற மூன்று மாணவ மாணவியரின் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் கலிமா, பிரார்த்தனைகள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரண்டாவது நிகழ்ச்சியின் முதல் அமர்வாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வாழ்த்தி பிரார்த்தனை செய்யும் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

இவ் வாழ்த்தரங்கில் குவைத் இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் (Federation of Indian Muslim Associations - FIMA) துணைத் தலைவர் அல்ஹாஜ் ஸித்தீக் வளியகாத், அய்யம்பேட்டை அல்-இஹ்ஸான் நற்பணி மன்றத்தின் குவைத் அமைப்பாளரும், குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் (TMCA) காப்பாளர் குழு உறுப்பினரும், குவைத் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத்தின் ஆட்சி மன்ற அமைப்பாளர் குழு உறுப்பினருமான கம்பளி பஷீர் மற்றும் குவைத் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஆவூர் பஷீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஃப்ழலுல் உலமா ஜியாவுத்தீன் அஹ்மத் பாகவீ கிப்லா அவர்கள் 'மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெற்ற மகத்தான வெற்றி' என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக மாநாட்டு பேருரையாற்றினார்.

மூன்றாவது நிகழ்ச்சியாக... குவைத்தில் வசிக்கும் தமிழறிந்த அனைத்து இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு 'இஸ்லாமிய சொற்பொழிவு, பொது அறிவு போட்டி மற்றும் திருக்குர்ஆன் மனனப் போட்டிகள்'; ஆகியவற்றையும், தமிழ் முஸ்லிம் பெண்மணிகளுக்கு 'இஸ்லாமிய பொது அறிவு போட்டி'யையும், மாநாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கென்று 'இஸ்லாமிய பொது அறிவு போட்டி' யையும் K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், பெண்களுக்கும் முறையாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளும், போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஸீரத்துன் நபி விழாக் குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin