வெள்ளி, 13 மார்ச், 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

முஹம்மது அலி ஐ.பி.எஸ்.
(ஓய்வு)mdaliips@yahoo.com

2009 ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய துணைக் கண்டமே ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை பத்ரா குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்வளின் வாழ்க்கையினை தத்துருவமாக சித்தரித்த “ஸ்லம்டாக் மில்லினர்” என்ற படத்திற்கு எட்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது கண்டு அனைவர் உள்ளமும் துள்ளிக் குதித்தது. அதற்கு சிகரம் வைத்தாற்போல ஒரு தமிழன் என்ற முறையிலும், அதிலும் ஒரு முஸ்லிம் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த செய்தி அத்தனை இந்தியரையும், குறிப்பாக அதைத்து முஸ்லிம்களும் ஒட்டுமொத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூல்கடித்தது. அமெரிக்க நாட்டின் ஹாலிவுட் நகரை நான் 2001 ஆம் ஆண்டு கண்டிருக்கிறேன். லூஸ் ஏஞ்சலில் உள்ள பிரமாண்டமான அரங்கங்களைப் பார்வையிட உலக அளவில் மக்கள் கூட்டம் மொய்க்கும். அங்கே விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரகுமான் தனது கொஞ்சும் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று நன்றி சொன்னபோது அனைத்து இறை நம்பிக்கை உள்ளவர்களும், குறிப்பாக ஏக இறைவன் அல்லாஹ் மீது ஈமான் கொண்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களின் உள்ளங்களும் குளிர்ந்தது.

ஏனென்றால் கடும் வெயிலிலும், கரடு முரடான பகுதியிலும், மூட நம்பிக்கையின் மொத்த உருவத்தில் உழன்ற காட்டு அரபிகளின் மத்தியிலே கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்த அன்னல் நபி அவர்கள் அரேபியர்களை செம்மைப்படுத்த தனது 40 ஆம் வயதில் நபித்துவம் பெற்று, சொல்லடியும், கல்லடியும் பெற்று ஏக இறைவன் ‘அல்லஹ்’ என்ற தாரக மந்திரத்தை மாந்தருக்கெல்லாம் கற்றுத்தந்த பொன்மொழி அகில உலகெங்கும் ஒளித்துக் கொண்டிருக்கிறது. மதினாவிலிருந்து மக்காவிற்;க்கு தனது காலடியினை எடுத்து வைத்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? ஏக இறை கொள்கைக்கு எதிராக நாள்தோறும் ஒரு கடவுள் உருவத்தினை வைத்து வணங்கிய ‘காபா’விற்கு சென்று அங்கு இருந்த சிலைகளை தானே ஒரு கம்பினை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்து எறிந்தார்கள் என்கிறது வரலாறு.ரசூலல்லாவினால் ஏற்றிவைத்த ஏக இறை தத்துவத் தீபத்தினை எடுத்துக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்பிய புகழ் ரசூலல்லாவின் தோழர்களையும், சகாபிகளையும் சாரும். அவ்வாறு பரப்ப இந்தியாவிற்கும் சில சகாபிகள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள்களும், அவர்களால் ஈர்க்கப்பட்டவர்களும் மரணமடைந்து பல இடங்களில் சமாதிகளும் உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் அவர்களெல்லாம் தனி சக்தி பெற்று வரம் தருபவர்களல்ல எனக் கருதாது சமாதியே கதி என கிடக்கும் இஸ்லாமியர்களைக் காண பரிதாபமாக இல்லையா?

பாமரர்கள், படிக்காதவர்கள், புகழ் பெறாதவர்கள் அவ்வாறு சமாதிகளை வழி பட்டால் அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என விட்டு விடலாம். ஆனால் உலக புகழின் உச்சியில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவான ‘பெட்ட தர்காவிற்கு 27.2.2009 அன்று சென்று காலை 7 மணியிலிருந்து மாலை ஒரு மணிவரை வழிபட்டிருக்கிறார். ஏதற்காக? அந்த ‘பெட்ட தர்காவிற்கு வந்த பின்பு தான் தனது ஒவ்வொரு காரியமும் வெற்றியடைந்ததாக’ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். யார் சொல்வது? உலக மக்கள் அத்தனை பேர்களும் டி.வி யில் வைத்த கண் மாறாது லாஸ் ஏஞ்சலில் இரட்டை ஆஸ்கார் விருதினை பெறும்போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உரத்த குரலில் சொன்ன ஏ.ஆர். ரகுமான் தான் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

அவர் பெட்ட தர்காவில் வழிபட்ட பெட்டிச் செய்தியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

எங்கள் ஊர் இளையாங்குடியில் 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு இங்கே தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர் அருகில் மல்லிபட்டணம் என்ற ஊர் உள்ளது.அங்கு வருடந்தோரும் ஒரு சிறிய தர்காவின் சந்தனக்கூடு வருடா வருடம் நடக்கும்.அந்த சந்தனக்கூடை இளையாங்குடிக்கு கொண்டுவர சிலர் முயன்றனர். ஆனால் ஈமானில் நம்பிக்கை உள்ள சிலர் சந்தனக்கூடு எடுத்து வந்த டிராக்டரின் டயர்களின் முன் விழுந்து மறித்து எங்கள் பிணம் மீது தான் சந்தனக்கூடு இளையாங்குடிக்குள் வர வேண்டும் என்று எதிர்த்ததால் அந்த முயற்சியினை அவர்கள் கை விட்டனர். அதன் பிறகு இது வரை 30 ஆண்டுகளாக மல்லிபட்டணம் சந்தனக்கூடு இளையாங்குடி எல்லையினைத் தொடவில்லை.ரசூலுல்லாவிற்கு எல்லாம் வல்ல இறைவன் கொள்கையினை கைவிட்டால் உகது மலை அளவு தங்கம் தருவதாகவும், விரும்பும் பெண்ணை மணம் முடித்துத் தருவதாகவும் கூறிய குரைசியர்களின் ஆசை வார்த்தைக்கெல்லாம் ரசூலல்லா மசியவில்லை. ஏன் ரசூலல்லாவிற்குப் பின் வந்த கலிபாக்கள், சகாபிக்கள் நினைத்திருந்தால் தங்களுக்கு அழங்காரமான சமாதிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது போன்ற தனி நபர் துதிபாடு;க்கெல்லாம் அவர்கள் இடம் கொடுக்கவில்லை என்பதினை மக்கா, மதினா சென்றவர்கள் நன்கு அறிவர். மாற்று மதத்தினர் காபாவினை படங்களில் பார்க்கும்போது அதனை ஒரு கல் என்றும் எங்களைப்போல் முஸ்லிம்களும் கல்லைத்தானே வணங்க மக்கா செல்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டிருக்கிறேன். நான் மக்கா 1999 ஆம் ஆண்டு சென்றபோது காபாவில் அசர்(சுகர்) தொழுது கொண்டு இருந்தபோது அதிசயமாக திடீர் என்று ஆலங்கட்டி மலை பெய்தது. இரவோடு இரவாக காபாவை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தான் அது கல்லல்ல, மாறாக கதவுடன் கூடிய தொழுகைக் கட்டிடம் என்று அறிந்தேன். இததை மாற்று மதத்தினரிடமும் எடுத்துச் சொன்னால் தான் அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

இப்போதும் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப்பெற சென்னை மவுணட்ரோடு தர்கா போன்ற இடங்களில் போர்வை, மலர் வலையம் வைப்பதினைக் காணலாம். அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா? முஸ்லிம்களில் சிலர் அங்கு சென்று வழிபடுவதால் தானே மாற்று மதத்தினரும் தர்காக்கள் தான் முஸ்லிம்கள் வழிபடும் கடவுள் என நினைக்கின்றனர். மனநிலை பாதித்த மக்களுக்கு நல்ல மனநல டாக்டர்களிடம் வைத்தியம் செய்யாது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் வைத்திருந்த 30 க்கு மேற்பட்டோர் தீ விபத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்ததினை நாம் மறக்க முடியுமா?

ஓரு முறை நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரசூலல்லா அவர்களுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் போது முஆத்தை அழைத்து, “ அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்று தெரியுமா? ஏன வினவினார்கள். ஆதற்கு முஆத் அவர்கள், ‘ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள் என்றார்.

அதற்கு ரசூலுல்லாஹ், “மக்கள் அல்லாவிற்கு மட்டுமே அடிபணிந்து வணங்கி வாழ்வதும்-வேறொருவரையும் இணை வைக்காமலிருப்பதும் தான் அல்லாவிற்கு மக்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்” என்றார்கள். “ யா முஆதிப்ன ஜபலி குத்து லப்பைக்க யாரசூலல்லாஹி வசைஹ்தைக்க…” என்ற வசனத்தில் இருக்கிறது. இசை முறசு நாகூர் கனிபா 50 வருடத்திற்கு முன்பு நான் சிறுவனாக இருந்த போது பாடிய பாடல் இங்கே சொல்வது பொருத்தமானதாக இருக்கும், “இறைவன் மேல் ஆணை, இறை மறையின் மேல் ஆணை, ஈமான் மறக்க மாட்டேன்”. சாதாரன மக்கள் யாராவது தர்காவிற்கு சென்றால் இஸ்லாத்திற்கு பெரிய தாக்கத்தினை ஏர்ப்படுத்தாது. ஆனால் உலக அளவில் புகழ் பெற்ற ஏ.ஆர். ரகுமான் செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 1987ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது உடல் நலம் குன்றி அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து சென்னை திரும்பிய உடன் கர்னாடகாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதனை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகமானது. அவர் மறைவதிற்கு பின் அதன் மவுசு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை, மாற்று மத நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஆகவே எப்போதும் அழியா புகழுடன் இருக்கும் எல்லா வல்ல அல்லாவிஹ்கு யாரும் நிகரில்லை. ஆகவே இனியாவது நாம் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்வதினை மாற்றி “எல்லாப் புகழும் அல்லாவிஹ்விற்கே” என்பதின் மூலம் ஏக இறை தத்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என இஸ்லாமிய சமூகத்திற்கு உரத்த குரலில் சொல்லலாம்

நன்றி : முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin