தூத்துக்குடி : திருச்செந்தூர் - நெல்லையிடையே கடந்த ஓராண்டாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படுகிறது.நெல்லையில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு திருச்செந்தூருக்கும், மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு நெல்லைக்கும் கடந்த ஓராண்டாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான எண்களைக் கொடுத்து இவற்றை நிரந்தர ரயிலாக இயக்க, ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கான துவக்க விழா நேற்று மாலை, திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அலங்கரிக்கப்பட்ட திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில்(எண்:56764) பயணத்தை, 4.10 மணிக்கு பச்சைகொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி எம்.பி.,ஜெயதுரை, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.கோயல், கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது மாலை, நெல்லையிலிருந்து சென்னை செல்லும் நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணைப்பாக உள்ளது. இதுபோல, காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலுக்கு, 56763 என்ற எண் தரப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து இருமார்க்கத்திலும் தினமும், மொத்தம் நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
செய்தி: தினமலர்
செய்தி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக