புதன், 16 டிசம்பர், 2009

துபாய் தமிழக பொறியாளர் இக்பாலுக்கு சமுதாயச் சுடர் விருது-ஆளுநர் வழங்கினார்


சென்னை: துபாயில் வசிக்கும் தமிழ் பொறியாளரான எம்.ஜே.முஹம்மது இக்பாலுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சமுதாயச்சுடர் விருது வழங்கி கெளரவித்தார்.

முஹம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமுதாய கூடத்தில் நடந்த இஸ்லாமிய இலக்கிய இரண்டாம் மாநில மாநாட்டில் இலக்கிய ஆய்வுகள், பட்டின்றம், நூலாய்வுகள், நூல் வெளியீடுகள் நடந்தன.

நிறைவு விழாவில் பலருக்கு இலக்கியமாமணி விருதுகளும், மூன்று பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், 7 பேருக்கு சமுதாய சுடர் விருதுகளும் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம், வழுத்தூரைச் சேர்ந்தவரும் தற்போது துபாயில் வசிப்பவருமான எம்.ஜே.முஹம்மது இக்பாலுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சமுதாயச்சுடர் விருது வழங்கி கெளரவித்தார்.

பி.இ, எம்.பி.ஏ. பட்டதாரியான இக்பால் 1986ம் ஆண்டு துபாய் ETA MELCO Elevator நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயராக தனது பணியை தொடங்கியவர்.

தனது கடின உழைப்பால் பொது மேலாளர் ஆனார். துபாயில் உருவான முக்கிய கட்டிடங்கள், விமான நிலைய லிப்ட்டுகள் மற்றும் எலிவேட்டர்கள் அமைக்கும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டு பெற்றவர்.

ஜப்பானின் மிட்சுபிஸி நிறுவனத்தின் "தங்கச் சான்றிதழை" தொடர்ந்து 3 முறை வென்றவர்.

ஜப்பான் மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் பல்வேறு மேலாண்மை பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்முறை அமைப்பான I.E.E.E (Institute of Electrical and Electronics Engineer) அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.

துபாய் என்ஜினீயர்கள் சங்கத் தலைவராகவும், ஆலோசகராகவும் உள்ள இவர் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆவார்.

இது தவிர பல்வேறு இந்திய, வளைகுடா மற்றும் சர்வதேச அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். பிரபலங்களின் விபரங்கள் அடங்கிய உலகப்புகழ் பெற்ற புத்தகமான மார்குயூஸ் கூ இஸ் கூ புத்தகத்தில் பொதுப்பிரிவிலும் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

துபாயில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களில் தனது துறை சார்ந்த கட்டுரைகளையும், ரமலான் காலங்களில் நோன்பின் பெருமைகள் குறித்த கட்டுரைகளையும், சமய ஒற்றுமை நல்லிணக்கத்திற்கான கட்டுரைகளையும் எழுதி வருபவர்.

இது தவிர அமெரிக்காவில் இருந்து வெளிவரும் எலிவேட்டர் வோர்ல்டு மாத இதழின் ஆசிய நாடுகளின் நிருபராகவும் உள்ளார்.

பல்வேறு சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்களில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் குறித்து ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெற தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் அளித்து வருகிறார்.

மேலும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வரும் இக்பால், தனக்கு வழங்கப்பட்ட சமுதாயச் சுடர் விருதை தனக்கு தொழில் வழிகாட்டியாக விளங்கும் தொழிலதிபர் செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன் மற்றும் தன் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்.

விழாவில், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் டாக்டர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ், கேப்டன் அமீர் அலி மற்றும் பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உமர் புலவர் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், கவிக்கோ அப்துல் ரஹ்மான் அறக்கொடை நிதியை துபாஷ் தாஜுதீனும், சமுதாயச் சுடர் விருதுகள் ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளர் M.J.M. அப்துல் கபூர், A.M.S. என்ஜினீயரிங் கல்லூரியின் தாளாளர் S.N.M. ஷேக் நூருத்தீன், பத்திரிக்கையாளர் சையத் முஹம்மத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் மெளலவி TJM. ஸலாஹுத்தீன் ரியாஜி, நோபல் மரைன் ஷாஹுல் ஹமீது ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin