வியாழன், 24 செப்டம்பர், 2009

"வருங்கால சந்ததிக்கு வளமான புவியை விட்டுச் செல்வோம்' : உலக மாநாட்டில் இந்தியச் சிறுமி வலியுறுத்தல்

பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புவியைக் காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா , சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் இந்தியச் சிறுமி யுகரத்னா ஸ்ரீவாஸ்தவா (படம்) .

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் செவ்வாய்க்கிழமை உலகில் உள்ள 300 கோடி குழந்தைகளின் சார்பாக ஸ்ரீவாஸ்தவா பேசியதாவது:

பருவநிலை மாறுபாடு காரணமாக புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன, பனிக்கரடிகள் இனம் அழிந்து கொண்டிருக்கிறது, 5ல் 2 பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை, புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது, பலதரப்பட்ட தாவர இனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன, பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதைத்தான் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல இருக்கிறோம்.

பருவநிலை மாறுபாட்டிற்கு நாடுகளின் அரசியல், நில எல்லைகள் தெரியாது. அதன் தாக்கம் பாரபட்சமின்றி அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட அறைகளில் அமர்ந்து கொள்கைகளை உருவாக்கும் போது பசுமை இல்ல வாயுவின் வெப்பம் தாங்காமல் அழும் குழந்தையையும், உயிர்வாழக் கெஞ்சும் தாவரங்களின் வேண்டுகோளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் உலக நாடுகளின் தலைவர்கள் புவியின் பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று நான் உங்களைக் கேட்பது போன்று வருங்கால சந்ததியினர் நம்மை கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்று பேசினார் ஸ்ரீவாஸ்தவா. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெüவில் செயின்ட் ஃபிடெலிஸ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீவாஸ்தவா, ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டத்தின் இளைஞர் அமைப்பான தன்ஸôவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச்செயலர் பான் கி-மூன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin