بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.
இஸ்லாத்தில் சிறந்தது
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி எண் 11 ]
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 12 ]
'நற்செயல்களில் சிறந்தது
'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 26 ]
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள்.[புஹாரி எண் 2782 ]
உலகத்தைவிட சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.[புஹாரி எண் 2796 ]
இறைவனிடத்தில் சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் எண் 7518 ]
கடமையல்லாத தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் சிறந்தது;
ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.[புஹாரி எண் 7290 ]
சகுனத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 5755 ]
தர்மத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 2748 ]
செல்வத்தில் சிறந்தது;
'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 19 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக