ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தே.மு.தி.க. வெற்றிவாய்ப்பை இழந்த போதிலும், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளை வெல்லும் போட்டியில் அக்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இத் தொகுதி இடைத்தேர்தலில் 53,827 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி வெற்றிபெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் 22,468 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்தது. இதனால், இத்தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தொண்டர்களின், அதாவது அ.தி.மு.க. ஆதரவாளர்களின் வாக்குகள் யாருக்கு என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகள் தங்களுக்குத் தான் என தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுமே கூறி வந்தன.
ஆனால், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகள் யாருக்கு என்ற போட்டியில் உண்மையில் வெற்றிபெற்றிருப்பது தே.மு.தி.க. தான்.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட (2006) கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கிறது. 2006 தேர்தலில் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற டி. செல்வராஜ் 38,188 வாக்குகள் பெற்றிருந்தார். அப்போது பதிவான மொத்த வாக்குகள் 93,648.
ஆனால், இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் 53,827 வாக்குகள் பெற்றிருக்கிறார். பதிவான மொத்த வாக்குகள் 84,480 தான்.
காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு ஓட்டு குறிப்பிட்ட சதவிகிதம் கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லை.
ஆளும் கூட்டணிக் கட்சிக்கு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேநேரத்தில் அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துள்ள சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளைப் பெறுவதில் தே.மு.தி.க. வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த கட்சி வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் 22,468 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்ட எஸ். சத்தியசீலனுக்கு 3,166 வாக்குகள்தான் கிடைத்தன. அப்போது தே.மு.தி.க.வுக்கு இந்த தொகுதியில் 4-வது இடம் தான் கிடைத்தது. மேலும், டெபாசிட் தொகையையும் இழந்தது.
தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் எம்.எஸ். சுந்தருக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 8,347 வாக்குகள் கிடைத்தன.
இந்த இடைத்தேர்தலில் கூடுதலாகக் கிடைத்துள்ள வாக்குகள் எம்.ஜி.ஆர். தொண்டர்களின், அதாவது அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் தான் என்பதை தே.மு.தி.க.வினரே ஒப்புக்கொண்டுள்ளனர்.
தி.மு.க.வினர், வாக்குகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால், காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைத்த எம்.ஜி.ஆர். தொண்டர்களின் மற்ற வாக்குகளும் தங்களுக்குத் தான் கிடைத்திருக்கும் என தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், எம்.ஜி.ஆர். தொண்டர்களின் வாக்குகளை எங்கள் பக்கம் இழுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இம்முறை எங்களுக்கு வாக்களித்த எம்.ஜி.ஆர். தொண்டர்கள் வரும் தேர்தல்களிலும் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.
அதேவேளையில் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் தங்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். அது அவர்களது தார்மிகக் கடமை என்று கூறி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளர் ஞா. தனலெட்சுமி வெறும் 3,407 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலம் திட்டவட்டமாகத் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்கும் இந்த தொகுதியில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பி.எம். பால்ராஜுக்கு 2,719 வாக்குகள் கிடைத்தன. ஆனால், தற்போது அதுவும் குறைந்து 1797 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக