புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆக. 6, 7ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

அரசுத் துறை வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், திட்டமிட்டபடி 2 நாள் ஸ்டிரைக்கை நடத்தவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் துணைத் தலைவர் என்.எஸ்.விர்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் ஒரு முறை செவ்வாய்க்கிழமை பேசவுள்ளோம். இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி 6, 7 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஜூலை 21ம் தேதியே வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பை வங்கி ஊழியர்கள் கொடுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 9 அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து, ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஸ்டிரைக் நடத்தப்படவுள்ளது.

ஊதிய உயர்வு, ஊனமுற்ற அல்லது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அனுதாப அடிப்படையில் பணி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன் வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin