திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்தற்போது திருச்செந்தூரில் இருந்து வியாழக்கிழமை தோறும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.
அது போல சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.
திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு “மெயின் லைனில்” இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல பாதை அமைக்கும் பணி முடிவடையாததால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது விழுப்புரம்- திருச்சி வழியாக “கார்டு லைனில்” இயக்கப்பட்டு வருகிறது.
ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவில் லாலு பிரசாத் யாதவ் பேசும்போது, திருச்செந்தூர்- சென்னை வாராந்திர செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், விரைவில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவித்தார். அப்போதிருந்தே திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்ற திருச்செந்தூர் பகுதி மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் ரெயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளன. தட்சிணமாற நாடார் சங்கம் மற்றும் நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கி மக்கள் துயர் துடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி, அதை பிரதமர் மன்மோகன்சிங், ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, முதல்- அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகலபாதை அமைக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும். அதையடுத்து இந்த புதிய பாதையை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார். புதிய பாதையில் அக்டோபர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கும்.
இந்த பாதை வழியே சென்னைக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும். அப்போது திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும்தினசரி ரெயிலாக இயக்கப்படும்.
சென்னை- விழுப்புரம் - திருச்சி பாதையில் (கார்டு லைனில்) தேவையான அளவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர சிறப்பு ரெயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேல் ரெயில்களை இயக்கினால் ஒரு ரெயில் மற்றொரு ரெயிலுக்கு வழி விட்டு செல்வதில் (கிராசிங்) பிரச்சினை ஏற்படும்.
அதனால்தான் கார்டு லைனில் திருச்செந்தூர் -சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடியவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மீட்டர்கேஜ் பாதையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடியபோது, திருச்செந்தூரில் இருந்து நெல்லை வந்த இணைப்பு ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் (இரண்டு 2-ம் வகுப்பு பெட்டி, ஒரு பொதுப்பெட்டி) நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைக்கப்பட்டன.
அகல ரெயில் பாதையான பிறகு அந்த 3 பெட்டிகள் நெல்லை ரெயிலுடன் இணைக்கப்படுவதில்லை. அதனால் திருச்செந்தூர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, திருச்செந்தூர் பகுதி மக்கள் வசதிக்காக, முன்பு போல நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் இரண்டும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்றும், பொது பெட்டி ஒன்றும் ஆக மொத்தம் 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக