செவ்வாய், 14 ஜூலை, 2009

சீனா : கலவரப் பகுதியில் இயல்பு நிலை திரும்புகிறது

சீனாவில் கலவரம் பாதித்த உரும்கி நகரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான ஷிஞ்சியாங் மாகாணம் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும்.இங்கு சுமார் 80 லட்சம் உய்குர்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் புறக்கணிக்கப்படுவதாக கூறி, தங்களுக்கு சுயாட்சி கோரி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் , கடந்த மாதம் உய்க்குர்ஸ் இன முஸ்லிம்களுக்கும், சீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை அரசு கையாண்ட விதத்தை கண்டித்து, இம்மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கடந்த 5 ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரம் மற்றும் போலீஸ் தாக்குதல் ஆகியவற்றில் 184 பேர் பலியானதாகவும், 1000 க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க உரும்கி நகர் முழுவதும் ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் , கலவரம் ஓய்ந்து ஒரு வாரத்திற்கும் அதிகமாகிவிட்ட நிலையில் , உரும்கி நகரில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கடைகள் , வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் , இயல்பு நிலை திரும்பத் துவங்கியுள்ளதையடுத்து , உரும்கி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெரும்பாலான இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

ஒரு சில பாதுகாப்பு படையினரையே வீதிகளில் பார்க்க முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin