ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) ஆலோசனை நடத்துகிறார்.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி. செல்வராஜ் ஜூலை 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, தமிழகத்தில் ஏற்கெனவே காலியாக உள்ள இளையான்குடி, தொண்டாமுத்துர், கம்பம், பர்கூர் ஆகிய தொகுதிகளுடன் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி 6 மாதங்களுக்குமேல் காலியாக இருக்கக் கூடாது என்ற விதியின் அடிப்படையில், இளையான்குடி தொகுதிக்கு ஆகஸ்ட் 24-க்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, 5 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆகஸ்ட் 24-க்கு முன்னர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஏற்கெனவே ஆலோசனை நடத்திவிட்டார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் நரேஷ் குப்தா செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.
இக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் வீ. வேலாயுதம், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் என். சாமுவேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக