தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
தூத்துக்குடி மாவட்ட ஜூடோ கழகம் மற்றும் தமிழ்நாடு ஜூடோ கழகம் ஆகியவை, தூத்துக்குடி துறைமுக விளையாட்டு குழுவுடன் இணைந்து நடத்திய மாணவ, மாணவிகளுக்கான (சப்- ஜூனியர்) 19-வது மாநில அளவிலான ஜூடோ போட்டி துறைமுக சமுதாய கூடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 20 மாவட்டங்களை சேர்ந்த 400 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. 12 வயதுக்கு குறைந்த மாணவ, மாணவிகள், 12 முதல் 14 வயது மாணவ, மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
12 வயதுக்கு குறைவான மாணவர் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்களும், 12 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் கரூர் மாவட்ட மாணவிகளும், 12 முதல் 14 வயது வரையிலான மாணவர் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்களும், மாணவிகள் பிரிவில் கோவை மாவட்ட மாணவிகளும் வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகள் பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி துறைமுக விளையாட்டு குழுத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் அசோக்குமார், தமிழ்நாடு ஜூடோ கழக பொதுச்செயலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஜூடோ சிறப்பு விருதுகளை வழங்கினார்.
துறைமுக போக்குவரத்து மேலாளர் முத்து, துணைப் பாதுகாவலர் ஜான்மணி, தலைமை மருத்துவ அலுவலர் சர்க்கார், தூத்துக்குடி ஜூடோ கழகத் தலைவர் முருகானந்தம், ஊர்க்காவல் படை தளபதி சாலைபஜவணன், மாவட்ட ஜூடோ கழகச் செயலர் ஜி.எம். பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவிலான ஜூடோ போட்டி இம் மாதம் 12-ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் கலந்து கொள்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக