வியாழன், 16 ஜூலை, 2009

கட்டாய திருமண பதிவு-இஸ்லாமிய அமைப்புக‌ள் வேண்டுகோள்.

சென்னை: தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மையினரி்ன் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.

தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப் பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த திமுக பாடுபடும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து, பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin