புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் எம்.பி.யாக தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர். ஜெயதுரை வெற்றிபெற்றுள்ளார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனைவிட 76,649 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் அடங்கிய பெட்டி பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கோ. பிரகாஷ், தேர்தல் பார்வையாளர்கள் சாந்தனு, பிரமோத் நளவாடே, மலேக்கர் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.
தொடர்ந்து சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் அறைகளிலும் தலா 10 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 21 சுற்றுகளும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் 23 சுற்றுகளும், விளாத்திகுளம் தொகுதிக்கு 24 சுற்றுகளும் எண்ணப்பட்டன.
அனைத்துச் சுற்றுகளும் முடிந்து பிற்பகல் 2 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை 76,649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மொத்த வாக்குகள்- 9,47,340
பதிவானவை- 6,56,169
தபால் ஓட்டுகள் 214
தபால் ஓட்டுகளில் 208 வாக்குகள் செல்லுபடியானவை. 6 ஓட்டுகள் செல்லுபடியாகாதவை.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் (தபால் ஓட்டுகளையும் சேர்த்து):
எஸ்.ஆர். ஜெயதுரை (திமுக)- 3,11,107
சிந்தியா பாண்டியன் (அதிமுக)- 2,34,368
எம்.எஸ். சுந்தர் (தேமுதிக)- 61,403
கராத்தே எஸ். சரவணன் (சமக)- 27,013
இ.பா. ஜீவன்குமார் (பகுஜன் சமாஜ்)- 6,737
எஸ். அருண்குமார் புவியரசு- 956
எஸ். ரகுபதி- 603
பி. கண்டிவேல்- 5522
கே. சுந்தரவேல்- 580
பி. பிரபாகரன்- 576
டி. பொன்ராஜ்- 817
எஸ். முத்து 1,246
ஏ. முருகன் 913
வி. ராமகிருஷ்ணன்- 1,402
வி. ராம்குமார்- 3,010
தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியின் முதல் எம்.பி.யாக எஸ்.ஆர். ஜெயதுரை மக்களவைக்குச் செல்கிறார்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபக் எம். டாமோர் தலைமையில் சுமார் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக