வியாழன், 16 ஜூலை, 2009

குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்


நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.

குற்றாலத்தின் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம் ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒரு தூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.

நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில் சாலக்குடி ஆற்றின் போக்கிலுள்ள அதிரம் பள்ளி போன்று ஒரு அழகிய இயற்கை சூழலில் உள்ளதோ அல்ல குற்றால அருவிகள்.


ஆயினும் குற்றால அருவியை இவ்வளவு சிறப்புடன் போற்றப்படுவதற்கு காரணம்: அதன் அருவி நீர் உடலிற்கு நன்மை பயப்பது, குற்றாலச் சூழல் மனதிற்கு இதமளிப்பது. இதனால்தான் குற்றாலத்தில் குளித்து ஊறியவர்கள் எவரும், வேறு எந்த அருவியிலும் குளிக்க முற்படுவதும் இல்லை, போற்றுவதும் இல்லை.

தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகை மலையைத் தழுவி ஓடிவரும் குற்றால அருவி நீர், அதன் வழியிலுள்ள பல மூலிகைச் செடிகளைத் தழுவி ஓடி வருவதால்தான் அதற்கு இந்த தனித்த மகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவராயினும் குற்றால அருவிகளில் குளித்து குறை கூறியவர் எவருமில்லை! மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்கு அருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர, குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.

அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும் கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோ செங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்று கேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்த வேறுபாடு தெரியும்.

Thanks By Webdunia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin