வியாழன், 9 ஜூலை, 2009

உஹதுப் போர் படிப்பினைகள்

لَيْسَ لَكَ مِنَ الأَمْرِشَيْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَـهُمْ فَإِنَّـهُمْ ظلِمُوْنَ

'(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை, அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம், - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதன் காரணமாக.' (அல்குர்ஆன் - ஆல இம்ரான் 3: 128)

இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்ட வசனமாகும்.

உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்படுகிறது. அவர்களின் நெற்றியில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களின் முகமெங்கும் இரத்தக்கரை படிந்திருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதற்காகவே இந்த வசனம் இறங்கியது.

அந்த வார்த்தை என்னவெனில்,

كَيْفَ تُفْلِحُ قَوْمٌ فَعَلُوْا هذَا بِنَبِيِّهِمْ

அவர்களின் நபியை இவ்வாறு செய்தவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?

وَهُوَ يَدْعُوْهُمْ إِلَى رَبِّـهِمْ عَزَّ وَجَلَّ

அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறார்.

அதாவது இந்த நபியின் பல்லை உடைத்து, நெற்றியிலும் காயத்தை ஏற்படுத்தி முகமெங்கெங்கும் இரத்தக்கரை ஏற்படுத்திய மக்காவிலிருந்து வந்திருக்கும் எதிரிப்படையினர் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும், அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி அவ்வாறு சொல்லக் கூடாது என்று நபிக்கு கட்டளையிடுகிறான்.

ஒரு பக்கம் முஸ்லிம்களின் படை, மறுபக்கம் நிராகரிப்பவர்களின் படை இவற்றில் எந்தப்படையை வெற்றி கொள்ள வைப்பது?, எந்தப் படையை தோல்வியுறச் செய்வது? என்ற அதிகாரமெல்லாம் அல்லாஹ்வாகிய எனக்குரியது. இந்த எனது அதிகாரத்தில் நீர் தலையிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களை கடுமையாக கண்டிக்கிறான்.

அதனால் தான், 'நபியே! இவ்விஷயத்தில் உமக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் கொடியோராக இருப்பதால் அவர்களை அவன் மன்னிக்கவும் செய்யலாம், அல்லது தண்டிக்கவும் செய்யலாம்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தின் மூலம் இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்வது சாலச் சிறந்ததாக இருக்கும்.

இந்த இறைவேதம் அல்குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால், அல்லது நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கற்பனையில் உதித்தவையாக இருந்திருந்தால், அல்லது அல்லாஹ் இறக்கிய வசனங்களை மறைப்பவர்களாக இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்த வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றிருக்காது.

பொதுவாகவே மனிதன் தனது கௌரவத்தை பாதிக்கக் கூடிய விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கக்கூடியவனாகவே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் தவறு செய்கிறார்கள், அதை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான், அந்த வசனங்களும் அல்குர்ஆனில் இடம் பெற்றிருப்பதே இது இறைவனிடமிருந்து வந்த வேதம் என்பதற்குரிய மிகப்பெரிய சான்றாகும்.

இன்னொரு விஷயத்தையும் நாம் விளங்கிக் கொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் வேண்டுமென்றே தவறு செய்யக்கூடியவர்கள் அல்லர். தவறில்லாத விஷயத்தை செய்யும் போது, மறுபுறம் தவறு போல் தோன்றும் விஷயத்தில் கூட, இஸ்லாம் மிகத் தெளிவாக இருக்கும், அதை பூசி மறைக்காமல், நெளிந்து கொடுக்காமல், வளைந்து கொடுக்காமல் நேருக்கு நேராக சொல்லும்.

அல்லாஹ் திருமறையில், 'முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள்' என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் கூட இந்த வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கக் கூடும். அதே நேரத்தில் வேறொரு கோணத்தில் தவறு இருப்பது போல் தோன்றுவதால் அல்லாஹ் அதை கண்டிக்கிறான்.

இஸ்லாம் ஓர் இறைமார்க்கம் என்பதற்கு இது ஒரு ஆதாரமாகும்.

அல்லாஹ் தனது அதிகாரத்தை எவருக்கும் பங்கு வைத்து கொடுக்க மாட்டான் என்பதற்கு இந்த வசனம் தெளிவான சான்றாகும். அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தனது அதிகாரத்தை பங்கு வைத்து கொடுக்க வில்லை என்பதை இந்த வசனம் விளக்கமாக சொல்கிறது.

இந்த உலகத்தில் ஜனாதிபதிக்கு தெரியாமலேயே, அவரது உதவியாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், பிரதம மந்திரி, முதலமைச்சர் போன்றோரின் உதவியாளர்கள் அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்வதையும் நாம் சர்வசாதாரணமாக பார்த்து வருகிறோம்.

ஆனால் அல்லாஹ்வின் அதிகாரத்தை இந்த உலகில் பிறந்த எந்த மனிதரும், கடுகளவு கூட பயன்படுத்தவும் கூடாது, தவறாக பயன்படுத்தி இறைவனுக்கு இழுக்கு ஏற்படுத்தி விடவும் கூடாது. இதற்கான நிறுத்தல் புள்ளி தான் இந்த வசனமாகும்.

இருந்தும் கூட, தான் ஒரு கடவுளின் அவதாரம் என்று மக்களை ஏமாற்றும் பேர்வழிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள் மனிதராக பிறந்தார் என்று மற்றொரு கூட்டமும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வசனம் இவை இரண்டையும் மறுக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர் பத்ருப் போர், அதில் மிகச் சிறிய முஸ்லிம் படையினர் அவர்களை விட பல மடங்கு பெரிய நிராகரிப்போரின் படையை வெற்றி கொண்டார்கள்.

ஆனால் உஹதுப் போரில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு கூட பலத்த காயங்கள் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி கூட பரவியது.

எல்லாவற்றுக்கும் நபித்தோழர்கள் நபிகளாரின் கட்டளையை பின்பற்றத் தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

மலைக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பு எறியும் வீரர்கள், வெற்றி அடைந்து விட்டோம் என்று எண்ணி தனது நிலையிலிருந்து கீழே இறங்கியது தான், புறமுதுகிட்டு ஓடிய நிராகரிப்பாளர்கள் திரும்பி வந்து மறுதாக்குதல் தொடுக்க காரணமாக இருந்தது, அதுவே தோல்விக்கும் காரணமாக இருந்தது.

தீயவர்களை மன்னிக்கவும் தண்டிக்கவும் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இருப்பது போன்று, வெற்றியை கொடுப்பதும் தோல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது என்பது தான் உஹதுப் போர் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

வெளியீடு :இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin