10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழில் தவறுகள் ஏற்படாதிருக்க பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துவிட்டு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களின் விவரங்களை கவனத்துடன் பதிவு செய்யும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, சாதி ஆகிய விவரங்கள் தவறாகப் பதியப்பட்டுள்ளதாகப் பல்வேறு புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களை பரிசீலிக்கும்போது, துவக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் பதிவுத்தாள்களில் உள்ள விவரங்களுக்கு மாறாக, 6-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைப் பதிவேடுகளில் தவறு இருப்பது தெரியவந்தது.
இதில் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் மற்றும் இனிஷியல், சாதி- இனம் ஆகிய விவரங்கள் தவறாக இருப்பது தெரியவந்தது.
இந்த விவரங்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு தவறாக மதிப்பெண் பட்டியலில் பதிவாகி இருப்பதும், 10-ம் வகுப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலிலும் தவறாகப் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.
இந்த தவறுகளைக் களைய சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.
சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது:
இடைநிலைக் கல்வி விதி எண் 5-ன்படி இடைநிலைக் கல்வியைப் பயின்று பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு பள்ளி மற்றும் மதிப்பெண் சான்றிதழில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை:
மேலும், 6-ம் வகுப்பில் தவறாக விவரங்களைப் பதிவு செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது தெரியவந்தது.
இத்துடன் மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும், அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களின் விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பெற்றோர் கவனிக்க...
பள்ளிச் சான்றிதழ்களில் தவறு நேராமல் இருக்க துவக்கப் பள்ளி முடித்து 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களின் விவரங்களை கவனத்துடன் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இடைநிலைக் கல்வி விதி எண் 5-ன் படி பள்ளிச் சான்றிதழில் எவ்வித மாறுதல் செய்ய முடியாது என்று அரசாணை உள்ளது.
எனவே, தங்களின் குழந்தைகளை 6-ம் வகுப்பில் சேர்க்கும் பெற்றோர் கவனத்துடன் விவரங்களைத் தர வேண்டும்.
இல்லையெனில் சான்றிதழில் ஏற்படும் தவறுகளை மாற்ற முடியாது.
தகவல் : அரம்பன்னை வாசிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக