தகுதியின்மைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க இம் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே முறையீட்டு மனு அளிக்கலாம். என மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் தலத்தணிக்கை மூலம் 100 சதவிகிதம் வீடுவீடாகச் சென்று சரிபார்க்கப்பட்டன. இதில், தகுதியின்மை எனக் கருதுவதற்குரிய நிலையில் உள்ள குடும்ப அட்டைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
பட்டியலில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு 16.2.2009 முதல் பொருள் நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. அக் குடும்ப அட்டைதாரர்கள் பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் குடும்ப அட்டைகளை களப்பணிக் கணக்கெடுப்பாளர்களிடம் தணிக்கைக்கு ஆஜர்செய்ய முடியாத காரணத்தால் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம்.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள், புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்து முறையீட்டு மனுக்கள் 17.2.2009 முதல் 16.3.2009 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்டன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேல்முறையீட்டு மனு பெறும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் பணி நிறைவுற்ற நிலையில் மீண்டும் பொருள் நிறுத்தப் பட்டியலில் கண்ட மேல்முறையீட்டு மனுச் செய்யத் தவறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேல்முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் 30.6.2009 வரை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையும் முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அட்டையிலுள்ள வயது வந்த நபர் எவரேனும் ஒருவர் மட்டுமே தங்கள் அசல் குடும்ப அட்டை மற்றும் இருப்பிடத்துக்கு ஆதாரமான வாக்காளர் அடையாள அட்டை, மின்னீட்டு நகல், தொலைபேசி பில், கடவுச்சீட்டு, குடிசை மாற்று வாரிய ஒதுக்கீட்டு ஆணை, வீட்டுவரி ரசீது ஆகியவைகளில் எவையேனும் ஒன்றின் நகலுடன் மேல்முறையீட்டு மனு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 30ம் தேதிக்கு பின்னர் வழங்கப்படும் முறையீட்டு மனு பெறப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக