தூத்துக்குடியிலிருந்து மதுரை, சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மற்றும் சென்னைக்கு பகல் நேர இரயில் இயக்க கோரி இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரையிடம் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் பிரமநாயகம், துணைச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கும், சென்னைக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். கடந்த 2008-09ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி தூத்துக்குடி-கோயமுத்தூர் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு இயக்கவிருக்கும் ரயிலை தூத்துக்குடியிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் திட்டத்தில் இருக்கும் தூத்துக்குடி-மதுரை புதிய ரயில்பாதை அமைக்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும். தூத்துக்குடி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை வழியாக இந்த ரயில் செல்லும் வகையில் ரயில்வே துறை ஆய்வு செய்து தயார் நிலையில் உள்ளது. வரும் பட்ஜெட்டில் அதற்கான பணியைத் தொடர நிதி ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
பயணிகள் நலச்சங்கத்தின் மனுக்களை பெற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, பொதுமக்களுக்கு பயன்படும் வகையான இத்திட்டங்களுக்காக மக்களவையில் குரல் எழுப்புவதாகவும், தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக