சனி, 13 ஜூன், 2009

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய டால்பின்: பள்ளி மாணவர்கள் கண்டு உற்சாகம்



தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு கடற்கரையில் இன்று ஒதுங்கிய டால்பினை காண பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
கடலில் துள்ளிக்குதித்து விளையாடி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விப்பது இந்த டால்பினின் தனிச் சிறப்பு ஆகும். மீனவர்களின் நண்பன் எனக் கருதப்படும் டால்பின் இன்று காலை 8.30 மணியளவில் மனப்பாடு கடற்கரையில் ஒதுங்கியது. இது 6அடி நீளம் மற்றும் சுமார் 150கிலோ எடையுடையதாக இருக்கும் எனத் தெரிகிறது.

மனப்பாடு கடற்கரை அருகே ஒதுங்கிய டால்பினை கண்ட மீனவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். இதனால் மனப்பாடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் டால்பினை காண கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

டால்பின் கரை ஒதுங்கியது பற்றி மீனவர் வினோசின், மன்னார் வளைகுடா உயிரியல் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். மேலும் டால்பினின் முதுகு பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக டால்பினுக்கு காயம் ஏற்பட்டால் கரை ஒதுங்குவது வழக்கம். இதேபோல் கடந்த 1973ம் ஆண்டு மனப்பாடு பகுதியில் ஏராளமான டால்பின்கள் கரை ஒதுங்கியது. தற்போது கரை ஒதுங்கிய டால்பினை தண்ணீர் அதிகளவு உள்ள ஆழ்கடல் பகுதியான குண்டாலில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : கந்தன், திருச்செந்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin