பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தபோது முதுகலைப் பட்டம் பெற்ற 2 பேருக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் வியாழக்கிழமை வழங்கினார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தொலைநெறி தொடர்கல்வி மூலம் சிறைக் கைதிகள் சிறப்பு கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் முதுகலை மற்றும் எம்.ஃபில் பட்டம் பெற்ற 36 பேருக்கு கடந்த ஆண்டு சிறை வளாகத்திலேயே பட்டமளிப்பு விழாவை நடத்தினார் துணைவேந்தர் சபாபதி மோகன்.
அப்போது விழாவில் பேசிய துணைவேந்தர், பட்டம் பெற்றுள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரவும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார்.
அதன்படி, முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் அனந்தநாடார் குடியிருப்பைச் சேர்ந்த தாணுலிங்கம் (45), பள்ளிவிளையைச் சேர்ந்த மோசஸ் அருள் ஆண்டோ (45) ஆகிய இருவருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளில் அடங்குவர்.
பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொலைதூரக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், அவர்கள் இருவருக்கும் பணி நியமன ஆணையை துணைவேந்தர் வழங்கினார்.
பார்வையற்றோர் சேர்க்கை: மேலும், தொலைநெறி தொடர்கல்வியில் பி.ஏ. தமிழ் இலக்கிய பாடத்தில் சேர்ந்த பார்வையாற்ற மாணவர்களான கோட்டையூரைச் சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆண்டோ டொஸ்பின், கோலியன்குளத்தைச் சேர்ந்த லிங்கதுரை ஆகிய 3 பேருக்கும் சேர்க்கை அனுமதி அட்டையையும், பாடப் புத்தகங்களையும் அவர் வழங்கினார்.
மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு அரசின் கல்வி கட்டணச் சலுகை, பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணச் சலுகை ஆகியவற்றால் இந்த 3 மாணவர்களும் கட்டணம் எதுவுமின்றி கல்வி பயில உள்ளனர்.
பின்னர் அவர் பேசியதாவது: நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பின்பு தொலைநெறி தொடர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி வாய்ப்பைப் பெருக்க தொலைநெறி தொடர்கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.
தொலைநெறி தொடர்கல்வியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை சுமார் 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கே தொலைநெறி தொடர்கல்வியில் சேர்ந்துள்ள 3 மாணவர்களுக்கும் அவர்களது பாடத்திட்டங்கள் "பிரெய்லி' முறையில் வழங்கப்படும் என்றார் துணைவேந்தர்.
பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கா.அ. மணிக்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) நா. கண்ணன், துணை அலுவலர் முனைவர் எஸ். பிரபாகர், நிதி அலுவலர் பி. செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஜே. பால்ராஜ் ஜோசப் வரவேற்றார்.
இக் கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள படிப்பு மையங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக