தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மஜீத் மகன் நயினார் (20)பி.ஏ. படித்து வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் போஸ் முகமது (19), சுலைமான் (19), பீர்முகமது (14), ஆகியோருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார்.
மலையில் உள்ள செண்பகாதேவி அருவிக்கு சென்ற அவர்கள் அங்கிருந்து தேனருவிக்கு சென்றனர். அதன் பின்னர் ஆசை அதிகரிக்கவே தேனருவியின் உச்சிக்கு சென்றனர். தேனருவியின் மேல் பகுதியில் தேன் கூடுகள் அதிக அளவில் உள்ளன. இதைபார்த்த 4 பேரும் தேன் எடுக்கும் ஆசையில் தேன் கூட்டின் மீது கல்லை வீசினர்.
இதனால் ஆயிரக்கணக்கான மலை தேனீக்கள் கூட்டில் இருந்து கலைந்து 4 பேரையும் விரட்டி விரட்டி கொட்டியது.
தேனீக்களிடம் இருந்து தப்பிக்க 4 பேரும் அலறியடித்து ஓடினர். அப்போது கல்லூரி மாணவர் நயினார் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
உயிருக்கு போராடிய அவரை மற்ற 3 பேரும் காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் தெரிவித்தனர். இது பற்றி தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நிலைய அதிகாரி ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நயினாரை கயிறு மூலம் காப்பாற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தேனீ கொட்டியதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே நயினார் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக