செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் வீர மரணம் நெல்லை கோர்ட்டு மீது பெட்ரோல் குண்டு வீச்சு; மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலை

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து நெல்லையில் பஸ் மறியல் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம், கோர்ட்டு மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் நெல்லையில் இருந்து இரவில் வெளியூர் போகும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நீண்ட தூரம்போகும் விரைவு பஸ்கள் மொத்தமாக போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வக்கீல்கள் கோர்ட்டு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். அது போல வண்ணார் பேட்டை ரவுண்டானா அருகில் வக்கீல் சங்க செயலாளர் சிவகுமார் தலைமையில் இலங்கை தமிழர் ஆதரவு இயக்கம் சார்பாக பஸ்மறியல் போராட்டம் நடந்தது.

மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு கைதானவர்கள் அனைவரும் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர்.

பாளை வி.எம்.சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். “எக்சேஞ்” அலுவலகம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் மீது ஒரு பெட்ரோல் வெடி குண்டை வீசி விட்டு தப்பி ஓடினார்கள்.

இதில் கண்ணாடி உடைந்து அறையில் தீப் பிடித்தது. அப்போது அலுவலக காவலாளி கோமதி நாயகம் ஓடி வந்து தீயை அணைத்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள விரைவு நீதி மன்ற கோர்ட்டு கட்டிட ஜன்னல் மீது ஒரு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

இதிலும் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்ட வசமாக இங்கும் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பாளை மற்றும் பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin