செவ்வாய், 24 மார்ச், 2009

சுவிஸ் பாங்க் ரகசியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுமா?

கறுப்புப் பணத்தின் சொர்க்கம்" என்றழைக்கப் படும் சுவிஸ் நாட்டின் வங்கிகளுக்கு இப்போது ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது. பொருளாதார தேக்கத்தில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் "முன்னேறிய நாடுகளின்" பார்வை இப்போது இந்த வங்கிகளின் மீது படிந்துள்ளது. சுவிஸ் வங்கிகளின் ரகசியத் தன்மை தொடருமா என்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு பற்றி இங்கு விவாதிப்போம்.

முதலில், சுவிஸ் வங்கியில் ரகசியம் மற்றும் பணத்தின் "கறுப்புத் தன்மை" எப்படி காக்கப் படுகிறது என்று பார்ப்போம்.

தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கறுப்புப் பண சேவையை கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களாக செய்து கொண்டிருக்கும் சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியின் கணக்குகளை வாடிக்கையாளரின் பெயரில் பராமரிப்பதில்லை. ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு தனி ரகசிய எண் வழங்கப் படுகிறது. அந்த வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அந்த ரகசிய "எண்"ணைக் கொண்டே நடைபெறுகிறது. அதே சமயம், வங்கிக் கணக்குகள் முற்றிலும் "ஆளில்லா" கணக்குகள் அல்ல என்பதும் வங்கியின் முக்கிய அலுவலர்களுக்கு வாடிக்கையாளர்களின் முழு விவரமும் தெரியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சுவிஸ் நாட்டில் வரி ஏய்ப்பு (Tax Fraud) என்பது குற்றம் என்றாலும் வரி விவரங்களில் (Tax Returns) குறைவான வருமானத்தை காட்டினாலோ அல்லது வரி விவரம் தாக்கல் செய்யாமல் இருந்தாலோ அது குற்றமல்ல. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும், இந்த வேடிக்கையான (அல்லது விவரமான) சட்ட பாதுகாப்பு சுவிஸ் மக்களுக்கு மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கும் மாறுபாடில்லாமல் வழங்கப் பட்டு உள்ளது. சுமார் ஒரு கோடி கோடி ரூபாய் ($ 2 trillion) வெளிநாட்டுப் பணம் சுவிஸ் வங்கிகள் வசம் இருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு பணத்தை ஒளித்து வைக்க விரும்பும் ஊழல் அரசியல் வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த சேவையை, முன்னூறு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வந்த சுவிஸ் வங்கிகளுக்கு இப்போது ஒரு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து (UBS) மீது அமெரிக்க வருமான வரி அதிகாரிகள் ஒரு வழக்கை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளனர்.

இது வரை இந்த விஷயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாத அமெரிக்க அரசு இப்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அரசு இப்போது நிதிப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருப்பதே ஆகும். இந்த வருடம் அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 90 லட்சம் கோடி ரூபாயாக ($1.75 trillion) இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஓரளவுக்கேனும் குறைக்க வரி வருமானத்தை (வரி ஏய்ப்புகளை குறைப்பதின் மூலம்) அதிகரிக்க வேண்டுமென்று அந்த அரசு விரும்புகிறது. வரி கட்டாத சுவிஸ் வங்கி (அமெரிக்க குடிமகன்கள்) கணக்குகளிடம் இருந்து வரி வசூல் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் வழக்கில், 300 கணக்குகள் சார்பாக யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து சுமார் 3900 ($780 million) கோடி செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

தற்போது பொருளாதார சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி இருக்கும் மற்ற முன்னேறிய நாடுகளும் அமெரிக்க வழியில் செல்ல விரும்புகின்றன. அடுத்த மாதம் நடை பெற உள்ள G-20 மாநாட்டில் "ரகசியம் காக்கும் சட்டங்களை" நீக்க வேண்டும் என்று சுவிஸ் மற்றும் இது போன்ற பிற நாடுகளின் மீது நிர்ப்பந்தங்கள் செய்யப் படும் என்று தெரிகிறது. அவ்வாறு செய்யாவிடில். இந்த நாடுகள் மீது சில கடுமையான கட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கவும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது..

சுவிஸ் நாட்டின் முக்கிய வங்கி, அமெரிக்க அரசு தாக்கல் வழக்கின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் சார்பில் வரி செலுத்தியதும், முன்னேறிய நாடுகள் போட விரும்பும் கிடுக்கிப் பிடியும், சுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் இன்னும் பல காலம் தொடர முடியாது என்று நம்ப வைக்கிறது. (நன்றி: http://www..merinews.com/catFull.jsp?articleID=15752124)

இந்தியர்களின் பணம் கூட ஏராளமாக சுவிஸ் வங்கிகளில் உள்ளது. அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் கூட ஏராளமான நிதிப் பற்றாக்குறை உள்ளது. சொல்லப் போனால், இன்னமும் கூட இந்தியாவின் சமூக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஏராளமான நிதி தேவைப் படுகிறது.

எனவே, இந்திய அரசு இந்த பணத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முழு ஈடுபாட்டோடு செயல் படுவார்கள் என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அவர்கள் பணமாகத்தான் இருக்கும் என்று நம்பப் படுகிறது.

இந்தியாவின் எந்த ஒரு பெரிய கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இது பற்றிய தேர்தல் வாக்குறுதிகள் இருக்கின்றனவா என்று தெரிய வில்லை. இந்தியாவில் உலுக்கிய போபர்ஸ் விவகாரத்தில் கூட இன்று வரை யார் பெயரில் பணம் பெறப் பட்டது என்று விளக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க அரசால் மேற்சொன்ன வழக்கில் விவரங்கள் பெற முடிகின்ற பட்சத்தில் இந்திய அரசால் ஏன் முடியாமல் போனது என்பது கூட மக்கள் விடை காண முயலும் ஒரு பெரிய கேள்விதான். வருகிற பொதுத் தேர்தலில் சமூக அக்கறை உள்ள ஊடகங்களும், மக்கள் விழிப்புணர்வு இயக்கங்களும் இந்திய அரசியல்வாதிகளிடம் சுவிஸ் வங்கி விவகாரத்தை எழுப்பி அவர்கள் மீது ஒரு தார்மீக நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி : A.C.M. இப்ராஹிம் , அல் க்ஹப்ஜி, சவூதி அரேபியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin