வியாழன், 26 மார்ச், 2009

அல்குர்ஆனின் சிறப்புகள

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.


அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.


1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.


2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.


அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.


எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!


திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.


நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)


மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)


அல்குர்ஆனை ஓதுதல்


பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.


குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.


நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)


அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக! என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.


இதோ குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறிய ஒருசில சிறப்புக்கள்:- குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது


1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)


2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)


3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)


4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)


5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் - மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)


6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை - காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். (அல்-குர்ஆன் 6:7)


7.குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)


குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது


1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)


2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)


3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்


4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி


5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )


6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)


7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)


8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி


9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)


10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)


11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)


12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)


13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)


14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)


15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)


16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)


குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)


குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.


குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

நன்றி : முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin