புதன், 25 மார்ச், 2009

ஸ்ரீவை பேரூர் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் மனைவி போலீசில் புகார்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் முத்துகருப்பன். இவரது மனைவி சுடலைவடிவு. இவர்களுக்கு நல்ல முத்துக்குமார் (27) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு முத்துகருப்பன் மாரடைப்பால் இறந்து விட்டார். மகன் நல்லமுத்துக்குமாரை தாய் சுடலைவடிவு வளர்த்து வந்தார். கடந்த 7 வருடத்துக்கு முன்பு முத்துக்குமார் வேலை தேடி சென்னை வந்தார். நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். 4 வருடங்களுக்கு முன்பு போக்கிரி படப்பிடிப்பு நடந்த போது நடிகை அசினுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அதிக சம்பளம் தருவதாக கூறி நடிகை அசின் முத்துக்குமாரை வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.

அசினுக்கு காபி டீ கொடுப்பது, டச்-அப் செய்வது என அனைத்து வேலைகளிலும் முத்துக்குமார் உதவியாக இருந்து வந்தார். ஆரம்பத்தில் ரூ. 7 ஆயிரம் சம்பளம் வழங்கப் பட்டது. பின்னர் ரூ. 10 ஆயிர மாக உயர்த்தி கொடுக்கப்பட்டது.

கடந்த வருடம் அசின் மும்பையில் கஜினி படப்பிடிப்புக்கு சென்ற போது முத்துக்குமாரையும் அழைத்து சென்றார். ஜூலை மாதம் முத்துக்குமார் விபத்தில் சிக்கி விட்டதாக கூறி அசினின் தந்தை ஜோசப் முத்துக்குமாரின் தாயார் சுடலைவடிவுக்கு தகவல் தெரிவித்தார். சுடலைவடிவு நேரில் சென்று பார்த்த போது இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்தது. முத்துக்குமாரை சிகிச்சைக் காக சென்னைக்கு அழைத்து வந்தார்.

11/2 மாதம் கழித்து உடல் நிலை சரியானதும் மீண்டும் மும்பை சென்று அசினிடம் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு மும்பை கொரேகான் மோதிலால் நகரில் தங்கும் அறை எடுத்துக் கொடுத்தனர்.

கடந்த 1 மாதமாக முத்துக்குமார் தனது தாயிடம் போனில் தொடர்பு கொண்டு பேசுவதில்லை. பணம் அனுப்புவதையும் நிறுத்தி விட்டார். அசினுக்கு போன் செய்து சுடலைவடிவு விசாரித்தார். அப்போது அசினின் தந்தை, உங்கள் மகன் வேலையை விட்டு நின்று விட்டான். அவன் தாதா கும்பலுடன் சேர்ந்து விட்டான் என்று கூறி போனை கட் செய்து விட்டார். பதறி போன சுடலைவடிவு மும்பைக்கு விரைந்தார். அங்கு அசின் தந்தை ஜோசப், ஜனவரி மாதம் 21-ந்தேதி வரை முத்துக்குமார் வேலையில் இருந்ததாகவும், அதன் பிறகு சம்பளத்தை வாங்கியதும் வேலையை விட்டு நின்று விட்டான். அவன் எங்கு சென்றான் என தெரிய வில்லை என்றார்.

இது சம்பந்தமாக அம்பாலி போலீஸ் நிலையத்திலும் அசினின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். அந்த முதல் தகவல் அறிக்கையை சுடலைவடிவிடம் கொடுத்து நீங்கள் ஊருக்கு செல்லுங்கள். 10 நாளில் உங்கள் மகனை கண்டு பிடித்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. போன் செய்தால் அசினும் அவரது தந்தையும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து சுடலை வடிவு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரித்தார்.

அப்போது சுடலைவடிவு தனது மகன் காணாமல் போனது குறித்து அசினும் அவரது தந்தையும் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரண் பாடாக சொல்கிறார்கள். எனது மகனை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என சந்தேகப்படுகிறேன் என்றார்.
தகவல் : மாலை மலர் நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin