
இந்தியத் தொழிலாளர்களை முறையாக நடத்தாமல், சித்திரவைத செய்யும், சம்பளம் சரியாக தராமல் கொடுமைப்படுத்தும் 122 மலேசிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்தது மலேசியா. ஆனால் இன்றைய நிலை தலைகீழாக மாறியுள்ளது.
மலேசியாவுக்குப் போவதை பலரும் இப்போது விரும்புவதில்லை. காரணம் அங்கு இந்தியர்களை மலேசிய நிறுவனங்கள் நடத்தும் விதம். சரியாக சம்பளம் தருவதில்லை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைப் பிடுங்கி வைத்துக் கொண்டு சித்திரவதை செய்வது, சிலருக்கு உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.
இதையெல்லாம் வைத்து இப்போது மலேசியாவுக்கு போகும் மோகம் குறைந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களை முறையாக நடத்தாமல், சித்திரவதை செய்யும் 122 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது இந்திய அரசு.
இந்த நிறுவனங்களில் பல வேலை வாய்ப்பு ஏஜென்சிகளும் அடக்கம். இவர்களை இதயமற்ற, மோசடி நிறுவனங்கள் என மத்திய அரசு வர்ணித்துள்ளது.
இந்த கருப்புப் பட்டியல் சென்னையில் உள்ள இந்திய குடியுரிமை அலுவலகத்தில் (சாஸ்திரி பவன், பாஸ்போர்ட் அலுவலகம்) ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்துள்ளது.
மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அங்கு தமிழ் டிவிகள் உள்ளன. மேலும், அரசு தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன.
அரசுத் தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்தியர்களுக்கான (பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகள்தான்) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குறைந்த கால அளவே தரப்படுவதாக மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், உள்ளூர் தயாரிப்புகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் குறைந்த கால அளவையே ஒதுக்குகின்றன.
இந்திய வம்சாவளியினர் 8 சதவீதம் பேர் இருந்தாலும் கூட அவர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் தர தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுக்கின்றன என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக