வியாழன், 5 பிப்ரவரி, 2009

நாங்கள் யார்?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடைபிணங்கள்!

சுதந்திரமாக சுற்றி திரிந்த போது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள்! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்அபாக்கியசாலிகள்!

தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர்துளிகளால் கானல் நீராகிப்போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்!

ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர்வாதிகள்! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம்பணமறிய ஆவல் எனகேட்கும் ஏ. டி. எம். மெஷின்கள்!

பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறிகொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள்! ஏ. சி. காற்றில் இருந்துக்கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள்!

வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல்நெஞ்சக்காரர்கள்!தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரைதாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள்!

அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள்! உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!

முடியும் வரை உழைத்து விட்டு முடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் ! கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும் பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !


Thanks To Mr. Mohammed Lukman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin