செவ்வாய், 14 ஜூலை, 2009

மாவட்ட பளுதூக்கும் போட்டி: திருச்செந்தூர் வீரர்கள் முன்னிலை


திருச்செந்தூரில் நடந்த மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் திருச்செந்தூர் வீரர்கள் அதிக வெற்றியை பெற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் போட்டிகள் திருச்செந்தூர் குறிஞ்சி கல்யாண மஹாலில் நடந்தது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் வழக்கறிஞர் சு.கு. சந்திரசேகரன் தலைமை வகித்தார். போட்டியை முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சுப்பிரமணியஆதித்தன் தொடக்கிவைத்தார்.

இதில் 56 கிலோ எடை பிரிவில் கோவில்பட்டி கோல்டன் ஜிம் அந்தோனிராஜ் 270 கிலோ எடையைத் தூக்கி முதலிடமும், திருச்செந்தூர் கிங்காங் ஜிம் காளிமுத்து 265 கிலோ எடையைத் தூக்கி 2ம் இடமும் பெற்றனர்.

60 கிலோ எடை பிரிவில் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியல் கல்லூரி மாணவர் பலவேசம் 370 கிலோ எடையைத் தூக்கி முதலிடமும், கிங்காங் ஜிம் ஒளிமுத்து 340 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடமும் பெற்றனர்.

75 கிலோ எடை பிரிவில் கிங்காங் ஜிம் ஜோதி 450 கிலோ எடையைத் தூக்கி முதலிடமும், அகஸ்டின் 2ம் இடமும், பாலகிருஷ்ணன் 3ம் இடமும் பெற்றனர். 82.5 கிலோ எடை பிரிவில் கிங்காங் ஜிம் சிதம்பரம் 390 கிலோ எடையைத் தூக்கி முதலிடமும், தூத்துக்குடி வாஞ்சிநாதன் ஜிம் எஸ்.பாலகுருசாமி 387.5 கிலோ எடையை தூக்கி 2ம் இடமும் வென்றனர்.


90 கிலோ எடை பிரிவில் கிங்காங் ஜிம் எம். சுரேஷ் 380 கிலோ எடையைத் தூக்கி முதல் பரிசும், மாஸ்டர்கள் பிரிவில் காயல்பட்டினம் சுகு உடற்பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த எஸ். சுப்பையா, வி.இசக்கிநாதன், தூத்துக்குடி வாஞ்சிநாதன் உடற்பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த சின்னத்துரை, திருச்செந்தூர் கிங்காங் உடற்பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி கிருஷ்ணன், ராமையா உள்ளிட்டோர் பரிசுகளும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர் சு.கு. சந்திரசேகரன், சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.ஜெ. செபஸ்டியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். திருச்செந்தூர் கிங்காங் உடற்பயிற்சிக் கழகத்துக்கும், காயல்பட்டினம் சுகு உடற்பயிற்சிக் கழகத்துக்கும் சிறந்த உடற்பயிற்சிக் கழகத்துக்கான கோப்பைகள் வழங்கப்பட்டன.

தகவலுக்கு நன்றி :கந்தன், திருச்செந்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin