ஐபிஎல் போட்டிகள் இந்தியாவை விட்டு போனது தேசிய அவமானம் என்கிறார் நரேந்திர மோடி. ஆனால் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம்தான் உண்மையான தேசிய அவமானம் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
ஐபிஎல் 2வது போட்டித் தொடரை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை, தேர்தல் பாதுகாப்புப் பணிகள் உள்ளன. மேலும் பல மாநிலங்களும் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் தரவில்லை. எனவே போட்டியை வேறு தேதிக்கு மாற்றுங்கள் என்று மத்திய அரசு ஐபிஎல் நிர்வாகத்தை வலியுறுத்தியது.
இதையடுத்து போட்டி அட்டவணைகளை பலமுறை மாற்றி மத்திய அரசை அணுகியது ஐபிஎல் நிர்வாகம். இருப்பினும் தேர்தல் காலத்தின்போது போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியே போட்டிகளை நடத்தப் போவதாக நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும், மத்திய அரசையும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளையும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
அதேபோல இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடைய அருண் ஜேட்லி, நரேந்திர மோடி ஆகியோரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதற்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்புடன் நடத்த முடியும். ஆனால், முழு அளவிலான பாதுகாப்பை மே 16ம் தேதிக்குப் பிறகுதான் தர முடியும்.
இந்தியாவில் உள்ளதைப் போல மிகச் சிறந்த பாதுகாப்பை இவர்களுக்கு வேறு யார் வழங்குவார்கள்? இந்தியாவில் விளையாடுவது மட்டும்தான் இவர்களுக்குப் பாதுகாப்பானது என்பது புரியாமல் தேசத்தை அவமானப்படுத்தும் முயற்சிகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் மத்திய அரசு மீது பாய்ந்துள்ளனர். விமர்சித்துள்ளனர். அவை தேவையற்றவை.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஐபிஎல் என்பது விளையாட்டு மற்றும் பிசினஸ் சார்ந்தது. அதில் அரசியலைக் கலக்கத் தேவையில்லை.
ஐபிஎல் போட்டிக்கான தேதிகள் வேண்டுமேன்றே தேர்தல் நேரத்தில் வருவது போல மீண்டும் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடக்க வேண்டும் என விரும்புபவர்கள், ஒருமுறையாவது, இங்குள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேதியை நிச்சயத்திருக்க வேண்டாமா?ஐபிஎல் விளையாட்டை இந்தியாவில் நடத்த முடியாதபடி மத்திய அரசு செய்து விட்டது.
இது தேசிய அவமானம் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். உண்மையில், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம்தான் தேசிய அவமானம் என்றார் ப.சிதம்பரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக