சனி, 21 மார்ச், 2009

இளைஞர் மேம்பாட்டு ஆணையத்துடன் பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலை. ஒப்பந்தம்


கலாசாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு ஆணையத்துடன், பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்யும் என்று அதன் துணைவேந்தர் பி.கன்னியப்பன் கூறினார்.

சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலைக்கழகத்தில், வடகிழக்கு பிராந்திய இளைஞர்கள் கலாசார பரிமாற்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் அவர் மேலும் பேசியது:

கல்வி பயிலும் மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கலாசார பரிமாற்றம், மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், பரந்த உலக அனுபவத்தையும் நேரடியாகப் பெற வைக்கும்.

பாடப் புத்தகங்கள் மூலம் படித்து கேள்விப்பட்ட விஷயங்களை நேரில் சென்று பார்க்கும்போது கிடைக்கும் அனுபவங்களை சக மாணவர்களிடமும் கூறி, அவர்களும் பயன்பெற உதவ வேண்டும்.

நாட்டின் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை, மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பி.கன்னியப்பன்.

தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு ஆணையம் சார்பில் அசாம், மிசோரம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்த 152 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin