துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் 25.08.2009 செவ்வாய்க்கிழமை இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தனது துணைவியாருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் தேரா குவைத் பள்ளியில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோருக்கு தமிழக நோன்புக் கஞ்சியுடன், வடை, சமோசா, பழம், பழரசம், பேரித்தம் பழம், மினரல் வாட்டர் உள்ளிட்டவற்றுடனான உணவுப்பொருட்களை நோன்பு திறப்போருக்கு இலவசமாக ரமலான் முழுவதும் வழங்கி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவரும், அரபிய மக்களும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலரும் தமிழக நோன்புக் கஞ்சியினை ஆர்வத்துடன் பருகி மகிழ்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் வருடந்தோறும் பங்கேற்கும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இவ்வருடமும் தனது துணைவியாருடன் பங்கேற்றார். அவருடன் ஈடிஏ ஸ்டார் குழும இயக்குநர் அஹ்மத் சலாஹுத்தீன், அஹ்மத் புஹாரி, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குநர் எம். அக்பர் கான், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய சமூக நல அறக்கட்டளை கன்வீனர் கே. குமார், நாகூர் ஷேக் தாவூத், மீரான், ஈமான் நிர்வாகிகள், புரவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி ஈமான் அமைப்பினரின் சேவையினைப் பாராட்டினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் மத, இன வேறுபாடின்றி அனைவரும் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது இதன் சிறப்பம்சம் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் முன்னணி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக