செவ்வாய், 21 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை துவக்கம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) துவங்குகிறது. இத் தொகுதிக்கான புதிய வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி. செல்வராஜ் ஜூலை 5-ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.

இதைத் தொடர்ந்து, இத் தொகுதிக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 29-ம் தேதி கடைசி நாளாகும். மறுநாள் (ஜூலை 30) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற ஆகஸ்ட் 1-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஆகஸ்ட் 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 21-ம் தேதியும் நடைபெறும்.

வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை துவங்குவதையொட்டி, அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல்தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2006, சட்டப்பேரவைத் தேர்தலின்போது இருந்த எல்லை அடிப்படையில் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே, அந்த எல்லை அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் அலுவலரான தூத்துக்குடி கோட்டாட்சியர் வீ. வேலாயுதம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

57,353 ஆண் வாக்காளர்கள், 59,254 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,16,607 வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் 100 சதம் புகைப்பட வாக்காளர் பட்டியல் ஆகும்.

அதுபோல, மொத்தமுள்ள 1,16,607 வாக்காளர்களில் 90 பேருக்கு மட்டுமே புகைப்பட அடையாள அட்டை இல்லை. 99.97 சதவிகிதம் பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளது.

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேறு ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

மொத்தம் 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 21-ம் தேதி சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin